04. இலக்கணம் – முதல் எழுத்துக்கள்

‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய (18+12=30) முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்

தமிழ் மொழி “ஒலியை” அடிப்படையாக கொண்டது. அடிப்படை ஒலிகளின் எழுத்து வடிவம் தமிழிலில் “உயிர் எழுத்து” என்கிறோம். எழுத்துகளுக்கெல்லாம் உயிராக இருப்பதனால் இவை உயிரெழுத்துகள் எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் இதனை ‘Vowels’ என்று குறிப்பிடுவார்கள்.

உயிரெழுத்துகள் 12 அவை:

உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
குறில் எழுத்துக்கள்:

அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்துகளைச் சொல்லக் குறைந்த முயற்சியும், குறைந்த நேரமும் ஆகிறது. எனவே இவை குறில் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

நெடில் எழுத்துக்கள்:

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற எழுத்துகளைச் சொல்ல நிறைந்த முயற்சியும், நிறைய நேரமும் தேவைப்படுகின்றன. எனவே இவை நெடில் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

ஓர் எழுத்தைச் சொல்வதற்கு அதாவது, ஒலிப்பதற்கு ஆகும் நேர அளவு மாத்திரை எனப்படுகிறது. குறில் எழுத்தின் ஒலிப்பு நேரம் ஒரு மாத்திரை. நெடில் எழுத்தின் ஒலிப்பு நேரம் இரு மாத்திரைகள்.

ஒரு மாத்திரை என்பதை நமது புரிதலுக்காக ஒரு வினாடி என்று எடுத்துக் கொள்ளலாம். குறில் எழுத்தின் ஒலிப்பு நேரம் ஒரு வினாடி. நெடில் எழுத்தின் ஒலிப்பு நேரம் இரு வினாடிகள். மெய் எழுத்துகள் குறில் எழுத்துகளைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன. ஒரு மெய் எழுத்தின் ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை அல்லது அரை வினாடி ஆகும்

மெய்யெழுத்துகள்:

உயிரெழுத்துகள் இயங்க உடல் போன்று செயல்படுவதால் மெய்யெழுத்துகள்(உடல்) எனப்படுகின்றன. மெய்யெழுத்துகள் ‘ஒற்று’ எழுத்து என்றும் அழைக்கப்படும். ஒற்று என்றால் புள்ளி என்று அர்த்தம். இவ்வெழுத்துக்களுக்கு மேலே புள்ளி இருப்பதால் இவை ஒற்று எழுத்து என்று அழைக்கப்படுகின்றன.

மெய்யெழுத்துகள் 18 அவை:

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:

  1. வல்லினம்
  2. மெல்லினம்
  3. இடையினம்

வன்மையான ஓசை உடைய மெய்யெழுத்துகள் வல்லின எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.

க், ச், ட், த், ப், ற் என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்லும் பொழுது வயிற்றுள் இருந்து வலிமையாக காற்று மேலே வரும். எனவே இவை வல்லின எழுத்துக்கள் ஆகும்.

மெல்லிய ஓசை உடைய மெய்யெழுத்துகள் மெல்லின எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.

ங், ஞ், ண், ந், ம், ன் என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையான முயற்சி போதும். எனவே இந்த மென்மையான எழுத்துகள் மெல்லின எழுத்துக்கள் எனப்படுகின்றன.

வல்லினத்திற்கும்,மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஓசை உடைய எழுத்துகள் இடையின எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ய், ர், ல், வ், ழ், ள் என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையும், வன்மையும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.