01. சாதனைப் பெண் – அன்னை தெரஸா

கருணையின் மறுபெயர் “அன்னை தெரஸா”.  நீலநிறக் கரை போட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். இன, மத, இட வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு.

இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gondza Bojadziu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gondza என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும்.

இவர் சிறுவயது முதல் ஆழ்ந்த இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்டவர். தனது 18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினரானார். கல்கத்தாவில் இந்திய மிஷனரிகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே, டப்ளினில் சில மாதங்கள் பயிற்சி பெற்றபின் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.

அதன்பின் ஆன்மீகக் கல்வியைத் தொடர்வதற்காக  அயர்லாந்து சென்றார். 1931 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார். அன்னை தெரசா 1931லிருந்து 1948-ஆம் ஆண்டுவரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1948 ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத் தாதிப் பயிற்சியைப் பெற்றார். 1949 இல் மோதிஜில் என்ற சேரிப்பகுதியை அடைந்து, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்.

1950 அக்டோபர் 7 லில் அன்னை தெரசாவின் தலைமையில், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி இல்லம் (Missionaries of Charity) தொடங்கப்பட்டது. 1965 இல் இந்த அமைப்பு சர்வதேச அளவில் அறியப் பெற்றது.

சேரிவாழ் ஏழை மக்களுக்கும் அநாதைகளுக்கும் தொழு நோயாளர்களுக்கும் அவர் செய்துவந்த தொண்டுகள் அளவிட முடியாதவை. ஏழை நோயாளர்களுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை. மாறாக, அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர்.

1962 ஆம் ஆண்டு பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. அவரின் இடையுறாத சமூகத்தொண்டை கௌரவிக்குமுகமாக 1980 இல் இந்தியாவின் அதிஉயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

1983 இல் எலிசபெத் மகாராணியின் கௌரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தது. 1997 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்காவின் கௌரவ பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி அன்னை தெரசாவைக் கௌரவித்தார்.

சுமார் 45 வருடகாலம் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா 1983 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார். 1997 செப்டெம்பர் 05 ஆம் தேதி கல்கத்தாவில் உயிர் நீத்தார். பொதுத் தொண்டுக்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணியான அன்னை தெரசா உலகின் சாதனைப் பெண்களில் ஒருவர் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.                                             (குறள்:1)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; அது போல உலகம் கடவுளில் தொடங்குகிறது.

As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.                                   (
குறள்:72)

அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.