02. இலக்கணம் – அறிமுகம்

ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். எல்லா மொழிக்கும் இலக்கணம் தேவையானது. மொழியை மேலும் அழகுறச் செய்வது இலக்கணமாகும். இலக்கணம் தெரியாமல் ஒரு மொழியைப் பேசும் போது அதன் அழகு அழிந்து விடுகிறது.  

உதாரணமாக தமிழை இலக்கணத்துடன் படிக்காதவர்கள் எப்படிப் பேசுவார்கள் என்று பார்ப்போம்.

“தாத்தா வீட்டுக்கு வந்துச்சு”  

தமிழை இலக்கணத்துடன் படித்தவர்கள் எப்படிப் பேசுவார்கள் என்று பார்ப்போம்.

தாத்தா வீட்டிற்கு வந்தார்”  

கேட்பவர்கள் இரண்டு வாக்கியங்களின் அர்த்தத்தையும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொண்டாலும் இரண்டாவது வாக்கியம் மொழியின் அழகை வெளிக் கொண்டு வருகிறது.   தவறில்லாமல் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம்.

மனிதன், தன் எண்ணத்தினை வெளிப்படுத்தப் பயன்படுவது எழுத்தும் சொல்லும் அதனாலாகிய பேச்சும் தான். எழுத உதவுவதோடு, படிக்கவும் உதவுவது இலக்கணமாகும்.  

தமிழில் இலக்கணம் ஐந்து வகைகளைக் கொண்டது:  

எழுத்து இலக்கணம்: தமிழ் ஒலியை அடிப்படையாக் கொண்ட மொழி. தமிழ் இலக்கண நூல்களில் “எழுத்து” என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தின் வகைகளை விளக்குவதே எழுத்து இலக்கணமாகும்.   உதாரணம்: அ, ஆ, க, கா, சி, சை, ப, பூ  

சொல் இலக்கணம்: ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். இவ்வாறு சொற்கள் எழுத்திலிருந்து உருவாவதையும் சொற்களின் வகைகளையும் பற்றி விளக்குவதே சொல் இலக்கணம் ஆகும்.   உதாரணம்: கை, மை, மான், அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், ஓடு, பாடு, விளையாடு  

பொருள் இலக்கணம்: அகப் பொருள், புறப் பொருள் என இரண்டாக பிரித்து விளக்குவதே பொருள் இலக்கணம் ஆகும்.  

யாப்பு இலக்கணம்: செய்யுள் வகைகளை விளக்குவதே யாப்பு இலக்கணமாகும்.  

அணி இலக்கணம்: செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றை விளக்குவதே அணி இலக்கணமாகும்.  

இதில் நாம் எழுத்து இலக்கணத்தையும் சொல் இலக்கணத்தையும் விரிவாகப் படிக்கப் போகிறோம்.

மற்ற மூன்று வகைகளைப் பெரிய வகுப்புகளில் படிக்கலாம்.