21. குரங்கும் முதலையும்

ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அந்த மரத்தில் ஒரு குரங்கு வசித்து  வந்தது. ஒருநாள் ஒரு பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. குரங்கு  அதைப் பார்த்து, ‘‘நீ என் விருந்தாளி. அமுதம் போன்ற நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலை சாப்பிட்டது. பிறகு தன் மனைவிக்கும் சில பழங்களை எடுத்துச் சென்றது.

‘‘அன்பே, ஒரு குரங்கு என்னுடைய நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தந்தது’’ என்றது முதலை.

அதனைச் சாப்பிட்டபின் முதலையின் மனைவி, ‘‘அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக் கொண்டிருப்பேன்’’ என்றது.

மனைவி சொல்லைத்தட்ட முடியாத முதலை குரங்கிடம் சென்று என் மனைவி உன்னை விருந்துக்கு அழைத்து வரும்மாறு கூறினாள் என்று பொய் சொன்னது.

‘‘நண்பனே, நல்லது ஆனால் உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்?’’ என்றது குரங்கு.

நண்பனே, கடலுக்கு நடுவில் ஒரு அழகிய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் வா!’’ என்றது முதலை. அப்படியே குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது.

நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது குரங்கைப் பார்த்து, ‘‘நண்பனே, நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை.

உடனே குரங்கு, ‘‘அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, இன்று காலையில் தான் என் இதயத்தைக் கழற்றி நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே!’’ என்றது குரங்கு. என்னைத் திரும்ப எடுத்துச் சென்றால் அதை எடுத்துக் கொண்டு வருவேன் என்றது. முதலை அதனை நம்பி நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.


பிறகு குரங்கு முதலையிடம்  சொல்லிற்று. ‘‘சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!” என்றது குரங்கு. முதலை ஏமாற்றத்துடன் திரும்பியது.

நீதி: ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து ஏமாறுவான்.