20. விருந்தினர் உபசரிப்பு

வரவேற்பு

நமது வீட்டிற்கு வரும் விருந்தினரை சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும். கதவைத் திறந்தவுடன் விருந்தினரின் முகம் பார்த்து, புன்னகையுடன் அவர்களை “உள்ளே வாருங்கள்” என்று அன்புடன் அழைக்க வேண்டும்

அமரச்செய்தல்

விருந்தினரை அன்புடன் “அமருங்கள்” என்று சொல்லி அவருக்கான இருக்கையை காட்டி அமரச் செய்ய வேண்டும்.

தாகம் நீக்கல்

விருந்தினர் சௌகரியமாக அமர்ந்தவுடன் அவருக்கு ‘பருக’ நீரோ அல்லது குளிர் பானமோ கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்துவது மிகச் சிறந்தது.

நலம் விசாரித்தல்

விருந்தினரிடம் நலம் விசாரிப்பது மிகவும் அவசியம். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உங்கள் மனைவி அல்லது கணவர் நலமாக இருக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா? போன்ற கேள்விகளைக் கேட்டு அவர் கூறும் பதில்களை கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும்.

உணவு அல்லது பலகாரங்கள் அளித்தல்

விருந்தினர்களின் விருப்பம் அறிந்து அவருக்கு உணவு அல்லது சிற்றுண்டி வழங்க வேண்டும். உணவுகளை விருந்தினருக்கு பரிமாறிய பின் தனக்கு பரிமாறிக் கொள்ள வேண்டும்.

விருந்தினர் பேசும் வரைக் காத்திருத்தல்

விருந்தினரிடம் என்ன காரணத்திற்காக வந்தீர்கள்? போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும். அவராகவே சொல்லும் வரை காத்திருப்பது மிகச் சிறந்தது.

விருந்தினர் கேள்விக்கு இன்முகத்துடன் பதில் அளித்தல்

விருந்தினரின் கேள்விகளுக்கு இன்முகத்துடன் பதில் அளித்தல் அவசியம். உங்களுக்கு பொருந்தாத மனம் ஒவ்வாத பேச்சுக்களை சாதுர்யமாக தவிர்ப்பது அல்லது தள்ளிப் போடுவது மிக அவசியம்.

வருகைக்கு நன்றி கூறல்

விருந்தினர் கிளம்பிச் சொல்கையில் அவர் வருகைக்கு நன்றி கூற வேண்டும். விருந்தினருக்கு தாம்பூலம், மஞ்சள், குங்குமம், பழம் அல்லது ஏதெனும் பரிசு கொடுப்பதும் வழக்கம்.

வழி அனுப்புதல்

விருந்தினருடன் தானும் வெளி நடந்து அவர் வாகனத்தில் ஏறிச் செல்லும் காத்திருந்து அவரை கையசைத்து வழி அனுப்புவது மிகச் சிறப்பு.

பயண நலம் விசாரித்தல்

விருந்தினர் தொலைதூரத்தில் இருந்து வந்தவராக இருந்தால் அவர் தன்னுடைய இருப்பிடம் போய் சேர்ந்த பின் தொலைபேசியில் அழைத்து அவருடைய பயண செளகரியங்களை விசாரிப்பது மேலும் சிறந்த செயல்.