18. எல்லாம் நன்மைக்கே

மகத நாட்டு மன்னன் ஒருவன் தனது அமைச்சருடன் வேட்டைக்குச் சென்றான். வில்லை எடுத்து, அம்பைப் பொருத்தி நாணை இழுக்கையில், அவன் கட்டை விரல் துண்டாகிக் கீழே வீழ்ந்தது.

இதைக் கண்ட அமைச்சர், “மன்னா, கவலை வேண்டாம். எல்லாம் நன்மைக்கே” என்றார்.

தன் விரல் போனதை, அமைச்சர் “நன்மைக்கே” என்றதால் கோபமுற்ற மன்னன், அந்த அமைச்சரை சிறையில் அடைத்தான். சில நாட்கள் சென்றன. இம்முறை மன்னன், தனியாக வேட்டைக்குச் சென்றான். அப்போது அங்கு இருந்த காட்டுவாசிகளிடம் சிக்கினான். அவர்கள் தங்களது எல்லைச் சாமிக்கு நரபலி கொடுக்க ஒரு மனிதனைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். மன்னனைக் கண்டதும், அவரை, நரபலி கொடுக்க சிறை பிடித்தனர்.

மன்னனை, குளிப்பாட்டி, சந்தனம் பூசி, பலி பீடத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அக் காட்டுவாசிகளின் தலைவன், மன்னனுக்கு, கட்டை விரல் இல்லாததைப் பார்த்து, “ஊனமுள்ளவரை பலி கொடுப்பது வீண்” என்று கூறி மன்னனை விடுவித்தான்.

அப்போது மன்னனுக்கு அமைச்சர் சொன்னது நினைவிற்கு வந்தது. ”எல்லாம் நன்மைக்கே”.

அன்று விரல் போனது, நல்லதற்கே. இல்லையேல், இன்று உயிர் போயிருக்குமே. என எண்ணியவன் ஊருக்கு வந்ததும், அமைச்சரை விடுவித்தான்.

அப்போது, அமைச்சர் என்னைச் சிறையில் அடைத்த போது, நான் “அதுவும் நன்மைக்கே” என்று நினத்தேன். அதுவும் பலித்துவிட்டது என்றார்.

மன்னன் “எப்படி” என்று கேட்டான்.

நீங்கள் என்னைச் சிறையில் அடைக்காவிட்டால் நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன். உடல் ஊனமில்லாத என்னைக் காட்டுவாசிகள் பலியிட்டிருப்பார்கள்.

நாமும், நமக்கு ஏதேனும் துன்பம் வந்தால், உடனே, வாடிவிடாது.”எல்லாம் நன்மைக்கே” என்று எண்ண வேண்டும். அப்போதுதான், நாளடைவில் துன்பம் அகலும். துன்பத்தின் வலி அதிகம் தெரியாது.