ஒருநாள் நதி ஒன்று, கிணறு ஒன்றிடம், “நீயும் என்னைப் போல கடலில் கலந்துவிடு வா” என்றது.
அதற்கு கிணறு, “நீ கடலில் கலப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீராகவும், உணவு விளைய பாசனத்திற்கும் பயன்படுகிறாய். ஆனால் கடலில் கலந்தபின்னர் உனது தனித்துவத்தை இழந்து விடுகிறாய். பயனில்லா உப்பு நீராகி விடுகிறாய். அதுபோல ஆக நான் விரும்பவில்லை. என் காலம் முழுதும் மக்களுக்கு பயன்படவே விரும்புகிறேன்” என்றது.
இதைக் கேட்ட நதி, “கிணறே, நீ தவறாகப் பேசுகிறாய். நாம் தனித்துவத்துடன் இருப்பதற்குக் காரணமே கடல் தான். அது பார்க்க ஆரவாரமாய் இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் தன் பணியைச் செய்து வருகிறது. கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மழைமேகமாக மாறி மழைத் தருகிறது. மக்கள் வாழ்வில் வறட்சியைப் போக்க பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டின் வெப்பதட்ப நிலையை நிர்ணயிக்கிறது. மழையில்லையேல், ஒருநாள் நீ, நான் எல்லாம் வறண்டுவிடுவோம்.” என்றது.
அப்போதுதான் கிணற்றிற்கு கடலின் முக்கியத்துவம் புரிந்தது. ஒருசிலருக்கு பயன் படும், தான் செருக்குடன் இருக்கும் போது உலகிற்கே பயன்படும் கடலின் விளம்பரமின்மைக் கண்டு வியந்தது.
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தது. நாமும், நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும்போது, அதற்கான விளம்பரத்தை எதிர்ப்பார்க்காது, நம் மனநிறைவை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.