09. ஒற்றுமையே பலமாம்

நாலு மாடுகள் மிகவும் நண்பர்களாய் இருந்தன. அவை தினமும் காட்டுப்பகுதிக்குச் சென்று புல் மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

நன்கு கொழுத்துக் காணப்பட்ட அவற்றை அடித்து உண்ண சிங்கம் ஒன்று விரும்பியது. அதற்காக அது ஒரு முறை முயன்றபோது நாலு மாடுகளும் சேர்ந்து சிங்கத்தைத் தாக்கி அதற்கு காயத்தை ஏற்படுத்த தப்பினால் போதும் என அவைகளிடமிருந்து சிங்கம் ஓடியது.

பின் ஒரு நாள், தனக்கு ஆலோசனைகள் கூறும் நரியைப் பார்த்து சிங்கம் அந்த மாடுகளைப் பற்றிக் கூறியது.

அதற்கு நரி, “சிங்க ராஜாவே, அவைகள் ஒற்றுமையாய் இருப்பதாலேயே பலமுள்ளதாய் தெரிகிறது. அவற்றை பிரித்தால், தனித்தனியாக அவற்றை அடித்து உண்ணலாம்” என்று தெரிவித்ததோடு அவற்றை பிரிக்கும் பணியையும் ஏற்றது.

ஒரு நாள் நான்கு மாடுகளில் ஒன்று சற்று தனியாக இருந்தபோது நரி அதைப் பார்த்து “உங்கள் நால்வரில் நீயே பலசாலி. ஆகவே நீ தனித்து புல் மேயப்போனால் உனக்கு அதிக புற்கள் கிடைக்கும். மேலும் உன்னுடைய பலமும் அப்போதுதான் மூன்று பேருக்கும் புரியும்’ என்றது.

அப்படியே மற்ற மூன்று மாடுகளிடமும் சொன்னது. நரி சொல்வதை உண்மை என்று நம்பிய மாடுகள், அடுத்த நாள் தனித்தனியாக புல் மேய தனி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தன. தினமும் ஒன்றாக அவற்றை சிங்கம் அடித்து உண்டது.

மாடுகள் ஒற்றுமையாய் பிரியாமல் இருந்தால் பலமுள்ளதாக இருந்திருக்கும். பிரிந்ததால் பலமற்றுப் போய் மடிந்தன. ஒற்றுமையாய் இருந்தால் நம்மால் பல சாதனைகளை சாதிக்கமுடியும். ஒற்றுமையின்மையால் நாம் செயலற்று போவோம்.

எழுதிப் பழகுக:

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.