03. உன் திறமையை உணர்

பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து ரமேஷ் அழுது கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து வந்த அப்பா ரமேஷிடம் அவன் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.

ரமேஷ், ‘அப்பா, நான் தொடர்ந்து காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கணக்கில் குறைவான மதிப்பெண்களே வாங்குகிறேன். எனக்கு கணக்கு வராது. என்னால் அப்பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியாது’ என்றான்.

அதற்கு அப்பா, ‘ரமேஷ், உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்’ எனச் சொல்ல ஆரம்பித்தார்.

ஒருவனிடம் குட்டியானை ஒன்று இருந்தது. அது ஓடிவிடக்கூடாது என்பதற்காக, ஒரு கயிற்றைக் கொண்டு அதன் காலில் கட்டி பக்கத்திலிருந்த தூணில் இணைத்துவிட்டான்.

யானை வளர்ந்து. பெரிய யானையானது. அது இப்போது நினைத்தால், அந்த தூணுடன் சேர்ந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியிருக்க முடியும். ஆனாலும் தான் குட்டியாயிருந்தபோது இருந்த பலமே இப்போதும் இருக்கிறது என யானை எண்ணியது. தன்னால் இப்போதும் தப்ப முடியாது என எண்ணியது. அது போல, உனக்கு கணக்கு வராமல் இருந்திருக்கலாம். ஆனால் நீ முயன்றால் கணக்கில் புலி ஆகலாம்.

நீ செய்யவேண்டியதெல்லாம், ‘உன்னிடம் உள்ள திறமையை புரிந்து கொண்டு படிக்கவேண்டும். நம்மால் முடியாது என நினைத்து சும்மா இருந்தால், யானையின் நிலை தான் உனக்கும். முயற்சி திருவினையாக்கும் என்பதை நினைவில் கொள்.

பின்னர், ரமேஷ் தன் திறமையை உணர்ந்து படித்து, கணிதத்தில் வகுப்பில் முதலிடத்தில் வந்தான்.

எழுதிப் பழகவும்.