15. புறாவும் எறும்பும் – எண்கள்

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம். தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது. அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.

தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.

இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையைச் சேர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, வேடன் ஒருவன் வந்து,  மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி, அதை நோக்கி வில்லில் அம்பைப் பொருத்தி
குறி பார்த்தான்.

அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது. அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது. புறாவும் அங்கிருந்து “சட்” என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு, சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும்.